சமனல சரணாலயத்தில் தீ விபத்து: 30 ஏக்கர் நாசம்.

சமனல இயற்கை சரணாலயத்தில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரணாலயத்தில் ஏற்பட்ட தீயில் சுமார் 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் ஹட்டன் வனத்துறை பாதுகாப்பு அதிகாரி வி.ஜே.ருக்ஷன் தெரிவித்தார்.
நல்லதண்ணி வாலாமலை தோட்டத்திற்கு அருகே கடந்த (23) அன்று மாலை ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சரணாலயம் முழுவதும் வேகமாக பரவியது. பரவிக்கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்த லக்ஷபான ராணுவ முகாம் வீரர்கள், வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து முயன்றனர். ஆனால் மலை உச்சிக்கு பரவிய தீயை கட்டுப்படுத்த முடியாததால், நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் தலையிட்டு இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் உதவியுடன் மௌசாகலே நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து 11 முறை தெளித்த பின்னர் பரவிக்கொண்டிருந்த தீ கட்டுப்படுத்தப்பட்டதாக வி.ஜே.ருக்ஷன் கூறினார்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இதுபோன்று சரணாலயங்களுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்த தகவல் இருந்தால் தங்கள் அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு வி.ஜே.ருக்ஷன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.