நாமல் ராஜபக்ச இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (26) முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
2013 ஆம் ஆண்டில், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் 10 ஏர் பஸ்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த பரிவர்த்தனை தொடர்பாக 16.84 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது இங்கிலாந்தின் தீவிர மோசடி அலுவலகம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கபில சந்திரசேனவின் மனைவிக்கு சொந்தமான புருனே கணக்கில் 2 மில்லியன் டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட கணக்கிலிருந்து வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்தப் பின்னணியில்தான், சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை தொடர்பாக கடந்த காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் பிணை உத்தரவுகள் இருந்ததால், நாமல் ராஜபக்ஸ இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.