மழையால் ரத்தான ஆஸி vs தெ.ஆ போட்டி – அரையிறுதிக்கு முன்னேறுவது யார்?

சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அரையிறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. குரூப் A-ல் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.
இவ்வாறிருக்க, குரூப் B-ல் தலா ஒரு வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான தங்கள் இடத்தை உறுதிசெய்யும் நோக்கத்தில் நேற்று போட்டிக்குத் தயாராகின. ஆனால், போட்டி நடக்கும் ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டமாக இருந்த சூழலில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது.
இதனால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் டி20 போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், மழையின் தாக்கம் குறையாத காரணத்தினால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, குரூப் B- பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் 3 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தும், நான்காவது இடத்தில் ஆப்கானிஸ்தானும் இருக்கிறது.
இன்றைய போட்டியில் மோதும் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளில் தோல்வியடையும் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும். அதேசமயம், வெற்றிபெறும் அணி தனது கடைசி லீக் போட்டியிலும் வென்றால் அரையிறுதிக்குச் செல்லும். ஆப்கானிஸ்தான் வெல்லும் பட்சத்தில், அந்த அணி தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும்.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் நூலிழையில் தோற்று அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, கடந்த டி20 உலகக் கோப்பையில் அதே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
எனவே, இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதும் போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.
அதேசமயம், இன்றைய போட்டியில் இங்கிலாந்து வென்றால், அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல தென்னாப்பிரிக்காவுடன் மோதும். ஆனால், எப்படிப்பார்த்தாலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளில் ஒரு அரையிறுதிக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.