#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்!

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று (பிப்.26) தொடங்கியது. இதில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளனர். வழிநெடுகிலும் விஜய்க்கு தவெக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அந்த பேனரில் இடம்பெற்ற வாசகங்கள்: ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர்.
புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம். விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை ஒடுக்கும் கோழைத்தனம்” இவ்வாறு அந்த பதாகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.