சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறி இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறி இருக்கிறது.

லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, அந்த அணி 37 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் தொடக்க வீரரான இப்ராகிம் சாட்ரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 106 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். 146 பந்துகளை எதிர் கொண்ட இப்ராஹிம் சாட்ரான் 177 ரன்கள் விளாசினார்.

இதில் 12 பவுண்டரிகளும்,ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் சட்ரான், கேப்டன் ஹஸ்மத்துல்லா 40 ரன்களும், அஸ்மத்துல்லா 24 பந்துகளில் 40 ரன்களும் குவிக்க ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர் பில் சால்ட் 12 ரன்களும், பென் டக்கட் 38 ரன்களும், ஜிமி ஸ்மித் ஒன்பது ரன்களிலும் ஹாரி புருக் 25 ரன்களும் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி தடுமாறினாலும் அந்த அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக போராடினார்.

ரூட் இருந்தவரை இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கிய கட்டத்தில் ஜோ ரூட் 120 ரன்களில் ஆட்டம் இழக்க ஜாஸ் பட்லர் 38 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் ஜிம்மி ஓவர்டன் மற்றும் ஜோபேரா ஆர்ச்சர் களத்தில் நின்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக போராடினர். இந்த நிலையில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. இதனால் ஆட்டம் திரில்லாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்களால் சிங்கிள்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது தவிர பவுண்ட்ரி சிக்சர் அடிக்க முடியவில்லை. இதனால் 49.5 வது ஓவரில் ஆதில் ரஷீத் தூக்கி அடிக்க அந்த பந்து நேராக ஹஸ்மதுல்லாவிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு உலககோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணி , ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.