போதைப்பொருளை மறைக்கப் பொய்முடி; 40 வயது ஆடவர் கைது (Video)

போதைப்பொருள் கொண்ட பல சிறு பைகளை மிக நுணுக்கமான முறையில் தன் தலையில் பொருத்தப்பட்ட பொய்முடியின் அடியில் மறைத்துக் கடத்த முயன்ற 40 வயது ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கொலம்பியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்தில் ஏறவிருந்த அந்தச் சந்தேக நபரைக் காவல்துறையினர் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 24) தடுத்து வைத்தனர். ஸ்கேனர் மூலம் பதுக்கி வைக்கப்பட்ட 220 கிராம் கோகைனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சிக்கிய மொத்த போதைப்பொருளின் மதிப்பு ஏறத்தாழ 10,000 யூரோ (S$13,903.84) இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
காவல்துறையினர் வெளியிட்ட காணொளி ஒன்றில், அதிகாரி ஒருவர் சந்தேக நபரின் பொய்முடியைக் கவனமாக அகற்றி மறைத்து வைக்கப்பட்ட கோகைன்னைக் கண்டுபிடிப்பதாக உள்ளது.
ஏற்கெனவே சந்தேக நபர் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுகள் இருமுறை நிரூபணமானதும் தெரியவந்தது.
போதைப்பொருள், குற்றச்செயல்கள் தொடர்பான ஐக்கிய நாட்டு அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, கொலம்பியாவில் கோகைன் உற்பத்தி 2013ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.