சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானதில்18 பேர் பலி!

தாய்லாந்தின் பிராச்சின்புரி மாநிலத்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று வடிகாலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் குறைந்தது 18 பேர் மாண்டதாகவும் 32 பேருக்குக் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை புதன்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வடிகாலுக்குள் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. “பேருந்து பள்ளமான சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதன் பிரேக்குகள் செயலிழந்தன, அதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் பின்னர் பேருந்து தடம் புரண்டது,” என்று காவல்துறை தெரிவித்தது.
மாண்டவர்கள் அனைவரும் கல்விச் சுற்றுலா சென்றவர்கள். விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன. விபத்துப் பகுதியில் மருத்துவ உதவியாளர்களும் மீட்புப் பணிக் குழுவினர்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது.
தலைநகர் பேங்காக்கில் இருந்து கிழக்கு நோக்கி 155 கிலோ மீட்டர் தூரத்தில் விபத்து நிகழ்ந்தது. விபத்தில் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ர இரங்கல் தெரிவித்தார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
விசாரணையில் பேருந்தின் பாதுகாப்பு தரத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து சாலைப் பயணத்திற்குத் தகுதியானது இல்லை என்று அறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பேடோங்டார்ன் ஷினவத்ர குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் வாகனங்கள் தொடர்பான விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. அதில் பலர் உயிரிழக்கின்றனர். விபத்துக்கு முக்கிய காரணம் தரமில்லாத, பாதுகாப்பற்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்வதும் மோசமான சாலைகளும்தான் என்று கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு பள்ளிப் பேருந்து ஒன்றில் வாயு கசிந்து தீ ஏற்பட்டது. இதில் 16 மாணவர்கள் உட்பட 23 பேர் மாண்டனர்.