மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மன்னார் விஜயம்.(video)

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் பங்களிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நேற்றைய தினம்(26.02) மன்னாருக்கு வருகை தந்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மன்னார் அலுவலகத்தில்
மன்னார் மாவட்ட பெண்கள் பிரதிநிதிகளை நேற்றைய தினம் (26) பிற்பகல் சுமார் 3 மணி அளவில் சந்தித்த அமைச்சர், தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது,
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியமென்பதை வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வட மாகாணத்தில் வசிக்கின்ற அனைவரும் ஒரு மாற்றத்தை விரும்பி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள்,
அந்த வகையில் மக்கள் ஆணையைப் பலப்படுத்துகின்ற வரவு செலவுத் திட்டம் ஒன்று இம்முறை முன்வைக்கப்பட்டுள்ளது.அதில் வட மாகாணத்துக்கென பாரிய ஒரு தொகையை எமது அரசாங்கமே முதன் முதலில் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 40 வருட காலமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாமல்,மக்களுக்குத் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படாமல், பெருந்தெருக்கள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையிலே வட மாகாணம் காணப்பட்டது.
அதிகளவிலான வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்கள் வடகிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகிறார்கள்.அது மாத்திரமில்லாமல் போதை வஸ்துக்கு அடிமையான குடும்பங்கள், மற்றும் பெண் தலைமைத்துவம் உள்ள குடும்பங்கள் அதிக அளவில் காணப்படுகிறார்கள்.
மக்கள் சேகரித்துக் கொடுக்கின்ற பணத்தை அரசியல்வாதிகளுக்காகப் பயன்படுத்துகின்ற ஒரு வரவு செலவுத் திட்டத்தை தான் இவ்வளவு காலமும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
முதல் முறையாக மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுத்து மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்ள,அதாவது கல்வி சுகாதாரம், மற்றும் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தக்கூடிய ஒரு வரவு செலவு திட்டத்தை இம்முறை நாங்கள் பார்க்கின்றோம்.முற்று முழுதாய் மக்கள் நலனுக்காகவே செயற்படுகிற ஒரு அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகிறது. இது மக்களுடைய அரசாங்கம்” என்றார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் மகளிர் குழு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.