தெலங்கானா, பஞ்சாப் மாநில அரசுகள் அனைத்து பள்ளிகளிலும் தாய் மொழி கட்டாயம் என அறிவிப்பு! – 2006 ஆம் ஆண்டே அறிவித்த தமிழ்நாடு

தெலங்கானா, பஞ்சாப் மாநில அரசுகள் அனைத்து பள்ளிகளிலும் தாய் மொழி கட்டாயம் என அறிவித்துள்ளது.
மும்மொழி கொள்கை
தமிழ்நாடு அரசு மும்மொழிக்கொள்கை மற்றும் புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மும்மொழிக்கொள்கை மூலம் மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயல்வதாக பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து தற்போது ஹிந்தி பரவலாக பேசப்படும் மாநிலங்களில், அவர்களின் தாய் மொழி பயன்பாடு குறைந்து விட்டதாக விவாதங்கள் எழுந்தது.
ஹிந்தி திணிப்பு
மகாராஷ்டிராவில் மராத்தி, குஜராத்தில் குஜராத்தி, ஒடிசாவில் ஒடியா, பீகாரில் போஜ்பூரி, மேற்குவங்கத்தில் வங்காளம், பஞ்சாபில் பஞ்சாபி என அந்தந்த மாநிலங்களுக்கு தாய் மொழி இருந்தாலும் தற்போது பரவலாக ஹிந்தி பேச ஆரம்பித்து விட்டதால் சிலர் தங்களது தாய் மொழியே பேச, எழுத தெரியாமல் வளர்ந்து வருகின்றனர். மெல்ல மெல்ல அந்த மொழிகளை பேசுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதை உணர்ந்த அந்த மாநில மக்கள் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். கர்நாடக மெட்ரோ ரயில்களில் ஹிந்தியில் பெயர் பலகை இருப்பதற்கும், ஹிந்தி தின கொண்டாட்டத்திற்கு பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான குமாரசாமி, பல மொழிகள் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் ஹிந்திக்கு மட்டும் முக்கியம் தருவது ஏன்? ஹிந்தி தினம் கொண்டாடப்படுவதை ஒருபோதும் கன்னடர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறினார். இதே போல் மஹாராஷ்டிராவிலும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பினார்.
முன்னோடி தமிழ்நாடு
இந்நிலையில் தற்போது தெலங்கானாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம் என தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில அரசும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டே அன்றைய திமுக அரசு மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தாய்மொழியை காப்பதில், பிற மாநிலங்களுக்கு தமிழக அரசு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற முக்கிய பதவிகளுக்கு ஆட்களை, தேர்வு செய்ய நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில், முதன்மை(mains) மற்றும் நேர்காணலை இந்தியாவின் அட்டவணையிடப்பட்ட 22 மொழிகளிலும், முதனிலை தேர்வை (Preliminary) ஹிந்தி மற்றும் ஆங்கில என இரு மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதில் முதனிலை தேர்வில், பிற மொழிகளையும் சேர்க்க வேண்டுமென அவ்வபோது தமிழகத்தில் இருந்து குரல் எழுந்து வருகிறது.