ஆளில்லா வானூர்தி மற்றும் நாய்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஏறக்குறைய 75 மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஆளில்லா வானூர்தி, நாய்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டார்.
புனேயின் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது பெண்ணை பேருந்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தத்தாத்ரேயா ராம்தாஸ் காடே ஸ்ரீரூர் தாலுகாவில் வைத்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) கைது செய்யப்பட்டார்.
“ஏறக்குறைய 500 காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், நாய்ப் படைகள், ஆளில்லா வானூர்திகள், 400க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அவரை தேடி வந்த நிலையில், 75 மணி நேரத்துக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு ராமதாஸ் காடே பிடிபட்டார்.” என்று புனே உயர் காவல் அதிகாரி அமிதேஷ் குமார் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (MSRTC) ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேருந்தில் செவ்வாய்க்கிழமை காலை சம்பந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட ராம்தாஸ் காடே, முதலில் இளம்பெண்ணை ‘தீதி’ (சகோதரி) என்று அழைத்து உரையாடலில் ஈடுபட்டார்.
சதாராவுக்கான பேருந்து வேறொரு நடைமேடைக்கு வந்துவிட்டதாகக் கூறி, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காலியான பேருந்தில் ஏறுவதற்கு அழைத்துச் சென்றார்.
பேருந்தின் உள்ளே விளக்குகள் எரியாததால், இளம்பெண் அதில் ஏறத் தயங்கிய நிலையில், ராம்தாஸ் காடே அது சரியான வாகனம்தான் என்று அப்பெண்ணை நம்ப வைத்ததாக மருத்துவத் துறை ஊழியராகப் பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இளம்பெண் பேருந்தில் ஏறியதும், ராம்தாஸ் காடே அவளைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்
அன்றிலிருந்து ராம்தாஸ் காடே தலைமறைவானார்.
ராம்தாஸ் காடே பல மாதங்களாக ஒரு காவலர் போல் தன்னைக் காட்டிக்கொண்டதாகவும் என்டிடிவி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனேயில் உள்ள குணத் கிராமத்தில் வசிக்கும் 37 வயதான குற்றவாளி, புனே, அகில்யாநகர் மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் ஒரு குற்ற வழக்கில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார்.
குற்றவாளியைக் கைது செய்ய மகாராஷ்டிராவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் மொத்தம் 13 காவல் குழுவினர் நிறுத்தப்பட்டனர். தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மோப்ப நாய்களும் ஆளில்லா வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டன.
கரும்புத் தோட்டங்கள் உட்பட குணத் கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் புனே நகர, புனே கிராமப்புற காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
குற்றவாளியின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு புனே காவல்துறை முன்னதாக ரூ.1 லட்சம் வெகுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.