மழை குறுக்கிட்டதால் ஆப்கானிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கல்!

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது. ஆப்கானிஸ்தான் பேட்டிங் இன்னிங்க்ஸ் முடிந்து, ஆஸ்திரேலியா சேஸிங் செய்து வந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்து முடித்த பின் ஆடுகளம் குளம் போல இருந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆப்கானிஸ்தான் ஏற்கனவே இரண்டு புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், தற்போது மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்று உள்ளது. குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று புள்ளிகளுடன் உள்ளது.

அந்த அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், தென்னாப்பிரிக்காவின் நெட் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். எனவே, ஆப்கானிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கலானதாக மாறி உள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மூன்றாம் வரிசை வீரர் செடிக்குல்லா அட்டல் 85 ரன்கள் சேர்த்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் 67 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் பென் டுவார்ஷியஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். கிளென் மேக்ஸ்வெல் மற்றும் நாதன் எல்லீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தபோது, துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுபுறம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். அவர் 40 பந்துகளில் 59 ரன்களை சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் 22 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தான் மழை பெய்தது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மோசமான ஆடுகளத்தால் போட்டி கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.