தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் பலி!

தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.

அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சுரங்கத்துக்குள் சேறும் சகதியும் பெருமளவு இருப்பது மீட்புப் பணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது.

சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்க தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், சுரங்க நிலச்சரிவில் 5 பேர் சேறு, சகதியில் சிக்கி பலியானதும், 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானதும் அதிநவீந சிரிய ரக டிரோன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்களில் ஒருவரான குர்பிரீத்தின் கூறுகையில், “என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சுரங்கப்பாதைக்குள் செல்வதற்கு நாங்கள் அனுமதி கேட்டோம், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் மிகவும் கவலையில் உள்ளனர்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.