உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? – புதிய இராஜதந்திர நகர்வுகள் : சுவிசிலிருந்து சண் தவராஜா

பல வருட கால உறைநிலைக்குப் பின்னர் அமெரிக்காவும் ரஸ்யாவும் தங்களுடைய ராஜதந்திர உறவுகளைப் புதிப்பிக்கும் வகையிலான பேச்சுக்களை நடத்தியுள்ளன. தனியே உறவுகளைப் புதிப்பித்து மேம்படுத்துவது மாத்திரமன்றி உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும் இப் பேச்சுக்கள் அமைந்துள்ளன. உக்ரைன் போர் காரணமாக மூன்றாம் உலகப் போர் உருவாகலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆரம்பமாகியுள்ள பேச்சுக்கள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டமையினாலேயே இந்தப் பேச்சுக்கள் சாத்தியமாகி உள்ளன.

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என தேர்தல் பரப்புரைகளின் போது ட்ரம்ப் தெரிவித்திருந்தமை தெரிந்ததே. 24 மணி நேரக் காலக்கெடு என்பது சற்றொப்ப மூன்று ஆண்டுகளை நெருங்கும் ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போதுமானதல்ல. ஆனால் ட்ரம்பின் அறிவிப்பானது போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் உறுதியாக உள்ளார் என்பதற்கான ஒரு காட்டியாக விளங்கியதை மறுப்பதற்கில்லை.

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எனது நல்ல நண்பன். நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தால் உக்ரைன் போர் ஆரம்பமாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதெல்லாம் ட்ரம்பின் அறிவிப்புகள். தனது கொள்கையில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்பதை நிரூபிப்பதைப் போலவே அரசியல் அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகின்றது.

ரஸ்ய – அமெரிக்க உறவுகளைப் பொறுத்தவரை ஜோ பைடன் காலத்தில் அது மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது என்பது இரகசியமான ஒரு செய்தி அல்ல. ஆனால், யனவரி 20ஆம் திகதி ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் அவர் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருந்தார். இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பாடல்கள் ஆரம்பமான நிலையில் பெப்ரவரி 12ஆம் திகதி ட்ரம்ப் – புட்டின் இடையிலான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து 18ஆம் திகதி இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான உயர் மட்டச் சந்திப்பு சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது. அமெரிக்கா சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்க்கோ றூபியோ தலைமையிலான குழுவினரும் ரஸ்யா சார்பில் வெளியுறவு அமைச்சர் சேர்கை லவ்ரோவ் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரியாத்தில் நடைபெற்ற பேச்சுகள் தொடர்பில் அமெரிக்க அதிபரும் ரஸ்ய அதிபரும் நம்பிக்கை தரும் வகையிலான கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர். “பேச்சுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. உக்ரைன் போரை என்னால் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லாமே சிறப்பாக நடைபெற்று வருகின்றன” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தாமல் உக்ரைன் மோதலுக்குத் தீர்வு காண முடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான முதலாவது நடவடிக்கை இந்தச் சந்திப்பு. பேச்சுக்களில் கலந்து கொண்ட அதிகாரிகள் புதியவர்கள். அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுக்களை நடத்தினர்” எனப் புட்டின் கூறியுள்ளார்.

தற்போதைய இராஜதந்திர நகர்வுகள் உக்ரைன் மோதலை – தற்காலிகமாகவேனும் – முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதாக அமையாது என்பதைக் கள நிலவரம் உணர்த்துகிறது.

உக்ரைனின் பங்களிப்பு இன்றி நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் முடிவுகளை தான் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளை ஐரோப்பிய ஒன்றியப் பிரிதிநிதிகள் பேச்சுக்களுக்கு அழைக்கப்படாமை தொடர்பில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், “உக்ரைன் சமாதானப் பேச்சுகள் தொடர்பில் ரஸ்யா எப்போதும் கதவுகளை மூடி வைத்திருக்கவில்லை. இதனை நான் நூறு தடவைகளுக்கு மேல் கூறி இருக்கிறேன். 2022 இல் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுகளில் இருந்து தன்னிச்சையாகவே உக்ரைன் வெளியேறியிருந்தது. இப்போதும் கூட உக்ரைனுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் பேசுவதற்கு நான் தயாராகவே உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

“ரஸ்யாவுடன் உடன்படிக்கை ஒன்றுக்குச் செல்வதற்கு உக்ரைனுக்கு மூன்று ஆண்டுகள் இருந்தன. அதனை அவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனை விடவும் அதிகமான சொல்லாடல்களை பல தரப்புகளில் இருந்தும் பார்க்க முடிகின்றது. ரஸ்ய அமெரிக்க உறவை வரவேற்கும் விதத்திலும், இது காலவரை பராமரித்து வந்த உக்ரைனை அமெரிக்க நற்றாட்டில் விட்டுவிட்டது என்பது போலவும் பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

போர் முடிவுக்கு வருவது மகிழ்ச்சியான விடயமே. அதற்கு பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானது. அத்தோடு விட்டுக் கொடுப்பும் தேவை. யார் யாருக்கு எதனை விட்டுக் கொடுப்பது என்பதே பிரச்சனையான விடயம். உக்ரைன் விவகாரத்தில் அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் உக்ரைன் இருக்கிறது. அமெரிக்க வல்லரசின் முன் பணிந்து போயே ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதுவே ரஸ்யத் தரப்பில் வெற்றியாக அமைந்து விடுமோ என்ற கவலை மேற்குலக நாடுகளின் பல தலைவர்களிடம் வெளிப்படுவதைப் பார்க்க முடிகின்றது. வெறுமனே கவலை தெரிவிப்பதோடு அவர்கள் நின்று விடுவார்களா அல்லது 2022 இல் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுக்களின் போது ஒப்புக் கொண்ட விடயங்களில் இருந்து உக்ரைனை வெளியேறச் செய்தது போன்று ஏதாவது முயற்சிகளை மேற்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மறுபுறம், இதுநாள்வரை புட்டினோடு பேசத் தயாரில்லை எனக் கூறி வந்த ஸெலன்ஸ்கி தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து சமரசம் செய்வாரா என்பதும் கூட கேள்விக் குறியாகவே உள்ளது. அவ்வாறு அவர் இறங்கி வரத் தயாராக இல்லாத பட்சத்தில் அவர் பதவியில் இருந்து அகற்றப்படுவாரா என்பதும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய விடயம். கடந்த வருடம் நடைபெற்றிருக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் உக்ரைனில் நடைபெறவில்லை. இராணுவச் சட்டம் அமுலில் இருந்ததால் அதனை நடத்த வாய்ப்பு இல்லாமல் போனது என்பது ஸெலன்ஸ்கி தரப்பின் வாதம்.

இதேவேளை, உக்ரைன் மக்களைப் பொறுத்தவரை சமாதானத்தை வெறுக்க அவர்கள் தயாராக இல்லை. ரஸ்யாவை முழுவதுமாக நம்பவும் அவர்கள் தயாரில்லை. எனவே. தமது எதிர்காலத்துக்கான நிலையான உத்தரவாதத்தை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ரஸ்யாவைப் பொறுத்தவரை தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க துளியளவும் தயாரில்லாத நிலையிலேயே உள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இழக்கவும் அது தயாரில்லை.

இத்தகைய விடாக் கண்டன் – கொடாக் கண்டன் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு உக்ரைன் விவகாரத்துக்குத் தீர்வைக் காண்பது என்பது கடினமே. ஆனால், அமெரிக்கா ஒன்றை நினைத்துவிட்டால் அதனைச் செய்து முடிக்கும் வல்லமை உள்ள நாடு என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகளைப் பாரத்தாகி விட்டது. எனவே உக்ரைன் மோதலுக்கு முடிவு கிட்டியே ஆகும் என்பது நிச்சயம். இதில் எந்தத் தரப்பு எதனை விட்டுக் கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.