ஸெலென்ஸ்கி, மன்னிப்பு கேட்க வேண்டும்!

அமெரிக்கா, உக்ரேன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28ஆம் தேதி) கையெழுத்தாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாகமலேயே நின்று போனது.
அது மட்டுமல்லாது, டிரம்ப் – ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பானது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து குரலை உயர்த்திப் பேசும் நிகழ்வாக முடிந்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரேன் – ரஷ்யா போர் தொடர்பில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, நிலையான அமைதிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எவ்வாறு ஏற்பாடு செய்வார் என எழுப்பிய கேள்வியினால் இருவருக்கும் இடையே பலத்த கருத்து வேறுபாடு எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பு, மற்ற நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமலும் கிளம்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான கனிமவள ஒப்பந்தம், அந்நாடு உக்ரேனுக்கு செய்த உதவியை ஈடுகட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஸெலென்ஸ்கி அதில் கையெழுத்திடாமலேயே சென்றுவிட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
“அமெரிக்காவின் புகழ்பெற்ற வெள்ளை மாளிகையில் திரு ஸெலென்ஸ்கி இந்நாட்டை அவமதித்துவிட்டார். அமைதிக்கு அவர் தயாராக இருக்கும் நிலையில் மீண்டும் இங்கு வரலாம்,” என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ள முயற்சி ரஷ்யா வருங்காலத்தில் ஆக்கிரமிப்பு மேற்கொள்வதை தடுக்குமா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக திரு ஸெலென்ஸ்கி அதிபர் டிரம்ப், துணை அதிபர் வான்ஸ் ஆகியோரிடம் கூறியது அமெரிக்க அதிபரைக் கோபமடையச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“திரு புட்டின் இத்துடன் நிற்கப்போவதில்லை, அவர் மேலும்மேலும் ஆக்கிரமிப்பு செய்வார். அவர் உக்ரேனியர்களை வெறுக்கிறார். உக்ரேனை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதுவே போதுமானதாக இருக்காது,” என்று திரு ஸெலென்ஸ்கி முறையிட்டதாக கூறப்படுகிறது.
திரு ஸெலென்ஸ்கி தான் கூறியதை விளக்க முற்பட்டபோது, திரு டிரம்ப், துணை அதிபர் வான்ஸ் இருவரும் ஸெலென்ஸ்கியைச் சாடினர். வெள்ளை மாளிகைக்கு வந்து திரு ஸெலென்ஸ்கி இவ்வாறு பேசுவது தங்களை அவமதிப்பதாகும் என்றும் இந்தப் போக்கு மூன்றாண்டுகளாக நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தடுக்கும் என்றும் இருவரும் கூறினர்.
“நீங்கள் கூடுதல் நன்றியுடன் இருக்க வேண்டும். எங்களுடன் இருந்தால் உங்களால் பேரம் பேச வாய்ப்பு உள்ளது. எங்களை விட்டால் உங்களிடம் பேரம் பேச ஒன்றுமில்லை,” என்று திரு டிரம்ப் ஸெலென்ஸ்கியைச் சாடியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப்புடன் ஏற்பட்ட மோதலுக்கு உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் அலுவலகப் பேச்சுவார்த்தைகள் வாக்குவாதமாக மாறி குரல்களை எழுப்பிய பின்னர், ஸெலென்ஸ்கி, “முடிவடையவிருந்த ஒரு கூட்டத்திற்காக எங்கள் நேரத்தை வீணடித்தார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று ரூபியோ சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.