வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தேசபந்துவுடன் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு தப்பினார்…

2023 டிசம்பர் 31ஆம் திகதி வெலிகம பலான்ன பகுதியில் உள்ள W15 என்ற ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பானவர்களுக்கு, மாத்தறை தலைமை நீதவான் அருண புத்ததாச நேற்று அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், வழக்கில் முக்கிய குற்றவாளியான கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராக உள்ள இந்த பொலிஸ் ஆய்வாளர் நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா அல்லது தப்பிக்க வைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நீதவான், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தேசபந்து தென்னக்கோன் வசிக்கும் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சோதனையிட்டதாகவும், ஆனால் அவர் நேற்று வீட்டில் இல்லை என்றும் விசாரணை பிரிவினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் உபுல் சமிந்த குமார என்ற பொலிஸ் சார்ஜென்ட் வெலிகம பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வந்துள்ளனர்.
மேலும், வெலிகம பொலிஸாரின் உத்தரவை மீறி தப்ப முயன்ற கொழும்பு CCD அதிகாரிகள் வெலிகம பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகினர். இந்த வழக்கின் விசாரணைகள் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில், புதிய அரசாங்கம் இந்த விசாரணையை முக்கிய விசாரணையாக கருதி மீண்டும் தொடங்கியுள்ளது.