மணல் லொறி மீது துப்பாக்கிச் சூடு… ஒருவர் வைத்தியசாலையில் கைது…

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மணல் லொறியில் கஞ்சா கொண்டு செல்வதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, 2025.03.02 இன்று காலை பருத்தித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டை சந்திப் பகுதியில் வீதித் தடைகளை அமைத்து சந்தேகத்திற்கிடமான லொறியை சோதனை செய்வதற்காக நிறுத்த சமிஞ்சை செய்துள்ளனர்.
அப்போது அந்த லொறி கட்டளையை மீறி தப்பிச் சென்றதுடன், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தப்பிச் சென்ற லொறியை துரத்திச் சென்று வல்லவெட்டித்துறை பொலிஸ் பிரிவில் லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.
அப்போது லொறி சாரதியும், உதவியாளரும் லொறியை விட்டு கருப்பு நிறப் பைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
லொறியை சோதனையிட்டபோது சந்தேக நபர்கள் இருந்த முன் பகுதியில் கஞ்சா சிதறி கிடப்பது அவதானிக்கப்பட்டதுடன், மணல் லொறியை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, விசாரணை நடத்தியதில் அந்த நபர் மேலே குறிப்பிட்ட லொறியின் உதவியாளராக இருந்து தப்பிச் சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் பொலிஸ் காவலில் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 19 வயதான தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.
சந்தேக நபர்கள் உரிமம் இல்லாமல் இந்த மணலை கொண்டு சென்றதும் , தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.