கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவி ஜிபிஎஸ் நோய்க்கு பலி!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பலியான மாணவி கௌதமி பிரவீன் என்பதும், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த 58 வயதான நபர், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு பலியான நிலையில், வியாழக்கிழமை, பள்ளி மாணவி பலியாகியிருக்கிறார்.
கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய் என்பது மிகவும் அரிதான நோயாவும், இது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்றும், நேரடியாக இதற்கு சிகிச்சை முறைகள் இல்லை என்பதும், உயிரைக் குடிக்கக் கூடிய நோய் இல்லை என்றாலும், இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இது அதிகம் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
புனேவில் அதிகமாக பரவி வந்த கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய், தற்போது கேரளத்திலும் பரவி வருகிறது. இதன் அறிகுறிகள், தசைத் தளர்வு மற்றும் கை, கால்கள் கூசுதல் போன்றவை என்று கூறப்படுகிறது.