தைப்பூசம் குறித்து இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய வானொலி அறிவிப்பாளர்கள் பணியிடை நீக்கம்.

தைப்பூசத் திருநாள் சடங்குகளையும் இந்து சமயத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் மூன்று வானொலி அறிவிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாக மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் மூவரும் ஆஸ்ட்ரோ ஆடியோ பிரிவின்கீழ் செயல்படும் எரா எஃப்எம் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள்.
தைப்பூசத்தையும் இந்துக்களையும் இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் கருத்துரைத்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
அவர்களது கருத்துகளுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து ஆஸ்ட்ரோ நிறுவனம் விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வானொலி அறிவிப்பாளர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டதாக எரா எஃப்எம் வானொலி நிலையம் தெரிவித்தது.
அந்த மூவரும் மன்னிப்பு கேட்டதைக் காட்டும் காணொளி வெளியிடப்பட்டது.
“பொறுப்புள்ள ஊடக நிறுவனம் என்கிற முறையில், இந்த விவகாரத்தைக் கடுமையானதாகக் கருதி முக்கியத்துவம் கொடுக்கிறோம். மிகுந்த கவனத்துடன் பரிசீலித்த பிறகு, விசாரணை முடியும் வரை அந்த மூன்று அறிவிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்று ஆஸ்ட்ரோ தெரிவித்தது.
தனது அறிவிப்பாளர்களின் கருத்துகளால் மனம் புண்பட்டவர்களிடம் ஆஸ்ட்ரோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக மலேசிய தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்தது.
வானொலி அறிவிப்பாளர்களின் கருத்துகள், செயல்பாடுகள் சமய உணர்வைக் காயப்படுத்தும் வகையில் இருந்ததாக மலேசிய மின்னிலக்கத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சாடினார்.
அவர்கள் நடந்துகொண்ட விதம் கவலை அளிப்பதாக அவர் கூறினார்.
எரா எஃப்எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயலுக்கு மலேசிய இந்தியர் காங்கிரசின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சம்பந்தப்பட்ட வானொலி அறிவிப்பாளர்களின் கருத்து, செயல் முட்டாள்தனமானது. அதுமட்டுமல்ல, மலேசியாவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கையை அது கேலி செய்து இழிவுபடுத்துகிறது. இதுபோன்ற பதிவை எரா எஃப்எம் வானொலி நிலையம் அனுமதித்திருக்கக்கூடாது.
“இத்தகைய செயல் நாட்டு மக்களிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கக்கூடும். பல சமய, பல இன மக்களிடையிலான பரஸ்பர மரியாதை, நல்லிணக்கம் இருந்து வருகிறது. இதை அடித்தளமாகக் கொண்டு மலேசியா வளர்ச்சி அடைந்துள்ளது. எரா எஃப்எம் வானொலி நிலையத்துக்கு எதிராக மலேசிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று திரு சரவணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.