கன்னட நடிகை விமான நிலையத்தில் கைது; 14.8 கிலோ தங்கம் பறிமுதல்.

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் கைதானார்.
32 வயதான இவர், 14.8 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்த ரன்யா ராவ், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் நடித்தவர். மேலும் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் துபாய் சென்ற இவர், திங்கட்கிழமை இரவு எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு திரும்பினார்.
அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அவர் அதிக தங்க நகைகளை அணிந்திருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவரது உடைமைகளைச் சோதித்தபோது, பெண்களுக்கான ஒரு இடுப்புப்பட்டையில் (பெல்ட்) 25 தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையின்போது, கடந்த இரு வாரங்களில் மட்டும் அவர் நான்கு முறை துபாய் சென்று வந்தது தெரியவந்தது. தங்கக் கடத்தலுக்காகவே அவர் இவ்வாறு குறுகிய இடைவெளிகளில் பயணம் மேற்கொண்டதும் உறுதியானது.
இதையடுத்து, ரன்யா ராவ் மீது சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்ததாக வழக்குப் பதிவாகி உள்ளது. அவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காவல்துறையினர் அவரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர்.
முன்னதாக, விமான நிலையத்தில் வசமாக சிக்கியதும், தாம் கர்நாடக காவல்துறையில் டிஜிபி தகுதியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் எனவும் பெங்களூரு மாநகர காவல்துறையினர் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறியுள்ளார்.
ஆனால், வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கியமான விவரங்கள் கிடைத்ததாகத் தெரிகிறது.
ரன்யாவின் தந்தை ராமச்சந்திர ராவ் கர்நாடக காவல்துறை வீட்டு வசதி கழகத்தின் இயக்குநராக உள்ளார்.
இவரது பெயரைப் பயன்படுத்தியே ரன்யா தங்கம் கடத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் வெளிநாடு சென்று நாடு திரும்பும்போது, முக்கியப் பிரமுகர்களுக்கு விமான நிலையத்தில் உதவும் காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், ரன்யாவை வரவேற்று சுங்கச்சோதனை ஏதும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நி்லையில், மகளின் தங்கக் கடத்தலுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் ரன்யாவுக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாகவும் ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தலின் பின்னணியில் சில முக்கியப் புள்ளிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.