இந்தியா, சீனாவுக்குப் பதிலடி வரி விதிக்கும் அமெரிக்கா.

அமெரிக்கப் பொருள்கள் மீது இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் அதிகப்படியான வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார்.

அந்த நாடுகள் பேரளவில் வரி வசூலிப்பதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அது மிகவும் நியாயமற்றது என்று கூறினார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா வரி விதிக்கும் என்றார் அவர்.

“அமெரிக்காவின் பொருள்கள் மீது மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக வரி விதித்து வருகின்றன. இனி மற்ற நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பதற்கான நேரம் கனிந்துவிட்டது. அமெரிக்கா விதிக்கும் வரித்தொகையைவிட மற்ற நாடுகள் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கின்றன. இது கொஞ்சம்கூட நியாயமில்லை,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க கார்கள் மீது இந்தியா 100 விழுக்காட்டுக்கும் அதிகமான வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிகளவில் வரி விதிக்கும் நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அதில் இந்தியாவும் அடங்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்துவிட்டதாகக் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து யாரும் தம்முடன் வாதிட முடியாது என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா விதிக்கும் சராசரி வரி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தென்கொரியா விதிக்கும் வரி நான்கு மடங்கு அதிகம் என்றார் அவர்.

“தென்கொரியாவுக்கு அமெரிக்கா ராணுவ உதவியுடன் பல்வகை ஆதரவுகளையும் வழங்குகிறது. அப்படி இருந்தும் அமெரிக்கப் பொருள்கள் மீது அந்நாடு அதிக வரி விதிக்கிறது. இந்த அணுகுமுறை அமெரிக்காவுக்குப் பாதகமானது. இது நியாயம் அல்ல,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.