உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி ஈட்டிய படகோட்டி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாயை ஈட்டியுள்ளார் படகோட்டி ஒருவர். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உலகில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடும் இடமாக உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த மாபெரும் ஆன்மிகத் திருவிழாவான கும்பமேளா கடந்த ஜன.13 முதல் பிப்.26 வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உ.பி. அரசு எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் புனித நீராடினர். திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், சினிமா நடிகை-நடிகர்கள் என மொத்தம் சுமார் 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். ஒரேநாளில் வைரலான இளம்பெண், தீ விபத்து, சங்கமத்தில் உள் நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல என்ற அறிக்கை எனப் பல சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில் உத்தரப் பிரசேத சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தொடரில் கும்பமேளாவைப் பற்றி முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில்,
கும்பமேளாவில் 45 நாள்களில் படகோட்டி குடும்பம் ஒன்று கிட்டத்தட்ட ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ள சுவாரசிய வெற்றிக் கதையை அவர் கூறினார். கும்பமேளாவில் படகு ஓட்டும் படகோட்டியிடம் 130 படகுகள் இருந்ததாகவும், நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 முதல் 52 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது. ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் என 130 படகுகளில் மொத்தம் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாது கும்பமேளாவில் கடத்தல், கொள்ளை, துன்புறுத்தல் என ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என்றும் 65 கோடி மக்களும் மகிழ்ச்சியாக சங்கமத்தில் நீராடிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். கும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாய் கிடைத்ததாகவும், இதனால் பல தொழில்கள் பயனடைந்ததாகவும் அவர் கூறினார்.