மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்!

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா்.
அஸ்ஸாம், மேகாலயம் உள்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் நில அதிா்வு உணரப்பட்டது.
இது தொடா்பாக மேகாலயத் தலைநகா் ஷில்லாங்கில் உள்ள பிராந்திய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் யாயிரிபோக் பகுதியில் புதன்கிழமை காலை 11.06 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 110 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடா்ந்து, மதியம் 12.20 மணிளவில் காம்ஜோங் மாவட்டத்தில் பூமிக்கடியில் 66 கி.மீ. ஆழத்தில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது’ என்றனா்.
இவ்விரு நிலநடுக்கங்களின் தாக்கத்தால் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள்-கட்டடங்கள் அதிா்ந்தன. இதனால், வீடுகள்-கட்டடங்களைவிட்டு வெளியே ஓடி வந்த மக்கள், திறந்தவெளியில் தஞ்சமடைந்தனா்.
பல கட்டடங்களில் விரிசல் விழுந்துள்ளது. தெளபால் மாவட்டத்தில் நிவாரண முகாமாக செயல்பட்டுவரும் ஒரு பள்ளி கட்டடம் குலுங்கியதால் அங்கிருந்த மக்கள் வெளியே ஓடும் விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அப்பள்ளி கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்களை சேகரித்து வருவதாக மணிப்பூா் அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.