தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னை உரம்…

ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னைத் தோட்ட உரிமையாளர்களுக்கு இந்த மாத இறுதி வாரத்தில் தென்னை உர மானியம் வழங்கப்படும் என்றும், அதன்படி சந்தையில் 9500 ரூபாய்க்கு விற்கப்படும் 50 கிலோ உரம் 4000 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கப்படும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டன் உரத்தை பயன்படுத்தி, எப்பாலை ராக் பாஸ்பேட் மற்றும் யூரியா கலந்து தென்னைக்கான சிறப்பு உரம் 56,000 மெட்ரிக் டன் தயாரிக்கும் பணியை உர நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், 5 ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சக ஆலோசனை குழு அமைச்சரின் தலைமையில் கூடியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டில் தென்னை சாகுபடியை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் விதை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோணத்திற்கும், மீதமுள்ள 20,000 ஏக்கர் பிற பகுதிகளுக்கும் சொந்தமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சக செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குநர்கள், அமைச்சக கூடுதல் செயலாளர்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள், அமைச்சக ஆலோசனை குழு செயலாளர் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.