மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.!

மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது மூன்றாவது வெற்றியை நேற்று (06) இரவு பதிவு செய்தது. இந்தியாவின் வதோதராவில் நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை இலங்கை அணி தோற்கடித்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச அழைத்தது. இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய அசேல குணரத்ன 64 ரன்கள் எடுத்தார். கேப்டன் சங்கக்கார 47 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நர்ஸ் 3 விக்கெட்டுகளையும், பெஸ்ட் 2 விக்கெட்டுகளையும், ஜெரோம் டெய்லர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் டுவைன் ஸ்மித் 49 ரன்களும், லெண்டில் சிம்மன்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் இசுரு உதான 2 விக்கெட்டுகளையும், சதுரங்க டி சில்வா மற்றும் ஜீவன் மெண்டிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது அசேல குணரத்னவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி அடுத்ததாக 10-ம் தேதி இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.