எரிந்த வீடுகளுக்கு நஷ்ட ஈடும் , புதிய வீடுகள் இரண்டையும் பெற்ற நாடாளுமன்ற குழு!

போராட்டத்தின் போது வீடுகள் எரிந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்காக அரசாங்கம் வழங்கிய நஷ்ட ஈட்டுத் தொகைக்கு கூடுதலாக, அரசாங்கத்தின் வியத்புர வீட்டு வளாகத்திலும் வீடுகளைப் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பன்னிபிட்டிய வீர மாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீட்டு வளாகத்தின் 05வது பிளாக்கில் வீடுகள் வழங்க வேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, 26 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டு வளாகத்தில் இருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையுடன், அவ்வாறு வீடுகளைப் பெற்ற 26 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
வியத்புர வீட்டு வளாகத்தில் வீடுகளை விற்கும் போது, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை விற்பனை செய்யும் முறை, வீட்டின் மதிப்பில் முதலில் 50% செலுத்தி, ஒரு வருடத்திற்குள் அனைத்து பணத்தையும் செலுத்தி முடித்த பிறகு வீடுகளை வழங்குவதாகும். ஆனால், இவர்கள் வீடுகளை வாங்கியது ஆரம்ப கட்டணமாக 25% குறைத்து, மீதியை 15 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வீடுகளின் மதிப்பு, சொத்தின் ஆரம்ப மதிப்பீட்டுத் தொகை மற்றும் தற்போதைய மதிப்பீட்டுத் தொகையை கூட்டி, அதை இரண்டால் வகுத்து கணக்கிடப்படும் தொகையை சொத்தின் மதிப்பாக செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.