சிரியா கலவரத்தில் பலர் மரணம்!

சிரியாவில் ராணுவப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாட்டின் ஆதரவாளர்களுக்கும் இடையே மூண்ட கடுமையான மோதலில் 70க்கும் அதிகமானோர் பலியாயினர்.
முன்னாள் அதிபர் அஸாட்டின் ஆட்சி கடந்த டிசம்பர் மாதம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து மூண்ட கலவரங்களில் இதுவே ஆக மோசமானதாகக் கருதப்படுகிறது.
லடாக்கியா, டார்டுஸ் ஆகிய கரையோர நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்டாக்கியா நகரில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அதிகாரிகளைக் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து கலவரம் வெடித்தது.
கைகலப்பு மூண்ட இடம் அஸாட் குடும்பத்தின் இரும்புக் கோட்டை.
கலவரத்தில் மாண்டோரில் நால்வர் பொதுமக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்ததாக மனித உரிமைக் குழுக்கள் கூறின.
இந்த வாரத் தொடக்கத்தில் சிரியாவின் புதிய அரசாங்கம் முன்னாள் அரசாங்கத்தின் வசம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பத்தில் உறுதியுடன் இருப்பதாகச் சொன்னது.
ஆனால், அஸாட் அரசாங்கம் அத்தகைய ஆயுதங்கள் எதையும் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் பயன்படுத்தவில்லை என்று மறுத்தது.