உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை!

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவானுடன் தொடா்புடைய மதுரா, பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களில் 16 நாள்கள் வரை இப்பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை மேலும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி கொண்டாட்டத்துக்கு உத்தர பிரதேச சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து மாநில அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இது நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனம், பக்தி இசை ஆகியவை இடம்பெறவுள்ளன. சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கைம்பெண்கள் பங்கேற்க வேண்டும். அவா்களை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை மாநில சுற்றுலாத் துறை நடத்துகிறது.

அதிக அளவில் கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி கொண்டாட்டம் என்ற கின்னஸ் சாதனையும் இந்த நிகழ்ச்சி படைக்க இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.