திமுக அரசை மாற்றுவோம்: த.வெ.க.வின் மகளிர் தின உறுதி.

அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காணொளி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் மகளிர் பாதுகாப்புப் பற்றி பேசும் விஜய், திமுக அரசையும் நேரடியாக விமர்சித்திருக்கிறார். அதில், எல்லாருக்கும் வணக்கம், இன்று மகளிர் தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என அத்தனைபேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே.
பாதுகாப்புடன் இருக்கும்போதுதான் நம்மால் மகிழ்ச்சியை உணரமுடியும். ஆனால், அப்படி எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. அதனால், எந்த மகிழ்ச்சியும் இருக்காதுதானே? அப்படியென்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய?
நீங்கள், நாம் எல்லோரும் சேர்ந்துதான் திராவிட முன்னேற்றக் கட்சி அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால்,அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதானே தெரிகிறது.
எல்லாமே இங்கு மாறக்கூடியதுதானே? மாற்றத்திற்கு உரியதுதானே? கவலைப்படாதீர்கள். 2026 ஆம் ஆண்டில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, இல்லை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தி.மு.க. அரசை மாற்றுவோம்.
மகளிர் தினமான இன்றைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்றுமட்டும் கூறிக்கொள்கிறேன், எல்லாச் சூழ்நிலையிலும் உங்களுடைய ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக உங்களுடன் நான் நிற்பேன். நன்றி வணக்கம்,” என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து திமுக, பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியின் பெயரையும் நேரடியாகச் சொல்லி விமர்சித்தது இல்லை. இப்போதுதான் முதல் முறையாக திமுக எனக் குறிப்பிட்டு வெளிப்படையாகத் திமுகவைத் தாக்கியிருக்கிறார். அதுபோக இன்று தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, விஜய் இந்தக் காணொளியை வெளியிடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மகளிருக்கான நலத் திட்டங்களை அறிவித்து மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களும் மகளிர் தின வாழ்த்துக் கூறியுள்ளனர்.