அனைத்துலகத் தங்கக் கடத்தல் கும்பல் தொடர்பில் சிபிஐ விசாரணை.

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 3) பெங்களூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ரன்யா ராவிடம் தெரியப்படுத்தாத (undeclared) தங்கம் இருந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்கள் வாயிலாக தங்கம் கடத்தி வருபவர்கள் மீது அந்நாட்டின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்கு பதிவுசெய்துள்ளது.
இதன் தொடர்பில் சிபிஐ, இந்தியாவின் வருவாய் உளவுத்துறை இயக்குநரகத்துடன் (Directorate of Revenue Intelligence) இணைந்து செயல்பட்டு வருகிறது. விசாரணையின் ஓர் அங்கமாக பெங்களூர், மும்பை விமான நிலையங்களுக்கு இரு குழுக்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக இந்துஸ்டான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய அளவில் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களைத் தவிர்த்து கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்க ஊழியர்களை அடையாளம் காணும் முயற்சியில் சிபிஐ இறங்கியுள்ளது. சுங்கத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட விமான நிலையங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் அத்தகையோரில் அடங்குவர்.
விசாரணையின்போது சிபிஐ, ரன்யா ராவைப் பின்னர் தடுப்புக் காவலில் வைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
ரன்யா ராவ், துபாயிலிருந்து நாடு திரும்பும்போது பெங்களூர் விமான நிலையத்தில் ரூபாய் 125.6 மில்லியன் (1.92 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான 14.2 கிலோகிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டார்.