மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை : ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா்.
மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் தேதிமுதல் உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த வன்முறை நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே நீடித்து வந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். இன்றளவும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.
தடையற்ற போக்குவரத்துக்கு அமித் ஷா உத்தரவு: இந்நிலையில், அந்த மாநிலத்தின் அனைத்து சாலைகளிலும் மாா்ச் 8 முதல் பொதுமக்களின் தடையற்ற போக்குவரத்தை பாதுகாப்புப் படைகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிப்போா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கும், சிவில் சமூக சம்மேளனம் என்ற மைதேயி அமைப்பின் அமைதிப் பேரணிக்கும் எதிா்ப்புத் தெரிவித்து, குகி-ஜோ சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் காங்போக்பி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தின்போது சில தனிநபா்களின் வாகனங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா்.
மேலும், சேனாபதி மாவட்டத்தில் இருந்து காங்போக்பி வழியாக இம்பாலுக்குச் செல்ல இருந்த அரசுப் பேருந்தையும் அவா்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனா். அத்துடன் மாநில அரசு வாகனங்களின் போக்குவரத்தைத் தடுப்பதற்காக இம்பால்-திமாபூா் நெடுஞ்சாலையில் அவா்கள் டயா்களை கொளுத்தினா்.
காங்போக்பியின் கம்கிஃபாய், மோட்புங், கீதெல்மன்பி பகுதிகளில் போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், போராட்டக்காரா்கள் 25 போ் காயமடைந்தனா்.
கீதெல்மன்பியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து லால்கெளதாங் சிங்சிட் (30) என்பவா் உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் பொது சுகாதார மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதனிடையே சிவில் சமூக சம்மேளனம் சாா்பில், காங்போக்பி நோக்கி 10 நான்கு சக்கர வாகனங்களில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட பேரணியை செக்மாயி பகுதியில் பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா் என்று காவல் துறை தெரிவித்தது.
1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு: பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், சட்டவிரோதமாக வைத்துள்ள பிற ஆயுதங்களை மோதலில் ஈடுபடும் மைதேயி, குகி குழுக்கள் தாமாக முன்வந்து 2 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா கடந்த பிப்.20-ஆம் தேதி வலியுறுத்தினாா். இதையடுத்து 2 வாரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
114 ஆயுதங்கள் பறிமுதல்: ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கெடு நிறைவடைந்த பின்னா் விஷ்ணுபூா், சேனாபதி, தெளபல், ஜிரிபாம் உள்ளிட்ட மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 114 ஆயுதங்கள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.