ஆஸ்திரேலியா நாட்டில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 40 ஆண்டுகள் சிறை!

ஆஸ்திரேலியா நாட்டில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (வயது 43), இவர் அந்நாட்டின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டதுடன் பாரதிய ஜனதா கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வாகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்கர் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலைத் தேடி வந்த பெண்களை சிட்னி நகரத்திலுள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து அளித்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அவரது இந்த குற்றங்களை விடியோ பதிவு செய்ததுடன், தனது கணிணியில் எக்ஸ்ல் சீட்டு ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பளித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர் எனவும் இந்த குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்கநிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாவது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் அந்நாட்டு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இந்த குற்றச் செயலுக்கு அவர் பயன்படுத்திய மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட விடியோ கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு அவரை 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்பட 39 குற்ற வழக்குகளில் குற்றவாளியென அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த குற்றங்கள் அனைத்தையும் மறுத்துள்ள தன்கர், பாலியல் உறவுக்கான ஒப்புதலை சட்டம் எவ்வாறு குறிப்பிடுகிறது என்பதற்கும், அந்த ஒப்புதலை தான் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 7) டவுனிங் செண்டர் மாவட்ட நீதிமன்றம் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதில், முதல் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் அவருக்கு 2053 ஆம் ஆண்டு வரை பரோல் வழங்கப்படாது எனவும் தண்டனை காலம் முடிந்து தனது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.