20ஐ ஆதரித்த 8 பேருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
20ஐ ஆதரித்த 8 பேருக்கு
எதிராக உடன் நடவடிக்கை
வலியுறுத்தி சஜித் அணியின்
பொதுச்செயலருக்குக் கடிதம்
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களுக்கு எதிராகவும் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதமொன்றை கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இன்று கையளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமமே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்ன்டோ, நளின் பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, சுஜித் பெரேரா, நிரோஷன் பெரேரா, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், ரோஹினி விஜேரத்ன மற்றும் கின்ஸ் நெல்சன் ஆகியோர் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அவர்களைக் கட்சிக்குள் வைத்திருப்பதா அல்லது வெளியேற்றுவதா என்பது பற்றி மிக விரைவில் முடிவொன்றை எடுக்கும்படியும் குறித்த உறுப்பினர்கள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.