பாகிஸ்தானில் ரயில்மீது தாக்குதல்; பயணிகளைப் பிணைக்கைதிகளாக வைத்துள்ள தீவிரவாதிகள்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் வட்டாரத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா பகுதியின் பெஷாவர் நகரை நோக்கிச் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை தீவிரவாதிகள் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நடந்த இச்சம்பவத்தில் அந்த ரயிலின் ஓட்டுநர் உட்பட சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஒன்பது பெட்டிகளைக் கொண்ட அந்த விரைவு ரயிலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திடீரென ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதனால், ரயில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் நின்றது. அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாதுகாப்புப் படையினர் உட்பட பயணிகள் சிலரைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட முயன்றால், அனைத்து பிணைக் கைதிகளையும் கொன்றுவிடுவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.

குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரயில் சென்றபோது , போலான் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் ஷாஹித் ரிண்ட் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க போலான் மாவட்டத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில் பயணிகளின் நிலை குறித்து உடனடியாகத் தெளிவாக எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.