கராத்தே வீரருக்கு ரத்தப் புற்றுநோய்: உயிருக்குப் போராடும் ஷிகான் ஹுசைனி

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரரும் திரைப்பட நடிகருமான ஷிகான் ஹுசைனி தமக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது அவரது மாணவர்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமது வாழ்நாள் எண்ணப்படுவதாக அண்மைய காணொளிப் பேட்டியில் அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமக்கு துணிச்சல் அதிகம் என்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வருவதாகக் கூறியுள்ளார் ஷிகான் ஹுசைனி.
“ரத்தப் புற்றுநோய் வருவதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்கிறார்கள். மரபணு பிரச்சினை, கிருமித்தொற்று, ஏதேனும் திடீர் அதிர்ச்சி என சில காரணங்களைச் சொல்கிறார்கள். நான் ஒருநாள் உயிர் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம், ரத்த தட்டுகள் (பிளேட்லெட்) தேவைப்படுகின்றன.
“நான் சில நாள்கள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மனத்துணிச்சல் அதிகம். இதுவரை நான் கராத்தே சொல்லிக்கொடுத்து வந்த இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்,” என்று ஷிகான் ஹுசைனி கூறியுள்ளார்.
நடிகர் பவன் கல்யாண் தம்மிடம்தான் கராத்தே கற்றுக்கொண்டதாகவும் தாம் விற்கும் இடத்தை அவர் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஷிகான் ஹுசைனி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஷிகான் ஹுசைனி, ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்தவர், ரஜினிகாந்த் நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் பணியாற்றினார்.
விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவரது பயிற்சியாளராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
ஏராளமான மாணவர்களுக்கு அவர் வில் வித்தை பயிற்சியையும் அளித்துள்ளார்.