மருத்துவமனை வார்டுக்குள்ளேயே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த ஊழியர் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, மருத்துவமனை துப்புரவு பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் 11ம் திகதி பலாத்காரம் செய்துள்ளார்.
சம்பவத்தின் போது பயத்தில் கூச்சலிட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த பிற மருத்துவமனை ஊழியர்கள், குற்றவாளியை பிடித்து தெல்லிப்பழை போலீசில் ஒப்படைத்தனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மனநல சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அன்று சில பரிசோதனைகளுக்காக மருத்துவமனை வார்டு எண் 3-ல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது மருத்துவமனை துப்புரவு பணியாளர் ஒருவர், அவர் சிகிச்சை பெற்று வந்த கட்டிலிலேயே வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
மருத்துவமனை தடயவியல் மருத்துவ அதிகாரி அப்பெண்ணை பரிசோதித்து அளித்த அறிக்கையில், அப்பெண் இரண்டு முறை பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.