தாய்லாந்து – மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்ட 549 இந்தியர்கள்!

தாய்லாந்து – மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், முகவர்களால் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்வாறு தாய்லாந்து – மியன்மர் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் பணமோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. சீன நிறுவனங்கள் இந்த மோசடி மையங்களை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

மியான்மர், கம்போடியா, லாவோஸில் உள்ள மோசடி மையங்களில் வேலை செய்த இவர்கள், காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பது, சட்டவிரோத சூதாட்டம் என பல வழிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து சீனா, மியான்மர், தாய்லாந்து நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கையில் மோசடி மையங்களில் வேலை செய்த சுமார் 7,000 பேர் மீட்கப்பட்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 2,000 பேர் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

அதன்படி, ஆந்திரம், தெலங்கானா,, மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 549 பேர் இரண்டு ராணுவ விமானங்களின் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை ஒரு விமானம் மூலமாக 266 பேரும் புதன்கிழமை ஒரு விமானம் மூலமாக 283 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.