மலையைத் தரைமட்டமாக்கி ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த அரண்மனைதான், தற்போது ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் ஒரு பகுதியை இடித்துத்தரைமட்டமாக்கி, அதில் மிகப்பெரிய அரண்மனையை சப்தமில்லாமல் கட்டியிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுத்து, அரண்மனையை பூட்டி சீல் வைப்பதா? அல்லது அதனை ஆந்திர அரசுக்குச் சொந்தமாக்கி பயன்படுத்துவதா என்பதில் முதல்வர் சந்திரபாபு நாயு தலைமையிலான அரசுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரண்மனையை வெளியில் இருந்து பார்ப்பதற்கே மெய்மறந்து போகும் வகையில் இருக்கும் நிலையில், உள்கட்டமைப்பை, தங்கத்தால் இழைத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ருஷிகொண்டா மலையைத் தகர்த்து 10 ஏக்கர் பரப்பளவில் இந்த அரண்டனை நான்கு பகுதிகளைக் கொண்ட கட்டடங்களாக அமைக்கப்பட்டுள்ளதும் விடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த கட்டடத்துக்காக ருஷிகொண்டா மலையின் பாதிப் பகுதி தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போது, இது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதல்வர் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், இது பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலையைத் தகர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரிகிறது. இந்த அரண்மனைக்குள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என அனைத்தும் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2021ஆம் ஆண்டுமே மாதம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இதுபோன்ற எத்தனையோ மலைவாழ் கிராமங்கள் பல நூற்றாண்டுகாலமாக சாலை, குடிநீர், மின் வசதியின்றி இருக்கும் நிலையில், ஒரு சில ஆண்டுகளில் இப்படியோர் அரண்மனை ஒரு மலைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு, அதுவும் இது தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் கட்டி முடிக்கப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.