ஸெலன்ஸ்கி – கதாநாயகனா? காமடியனா? சுவிசிலிருந்து சண் தவராஜா.

திரைத்துறையில் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பிரபலம் பெற்ற பலர் பின்னாளில் கதாநாயகர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள். தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை ஜே.பி.சந்திரபாபு, நாகேஷ் ஆகியோர் ஒரு காலகட்டத்தில் கதாநாயகர்கள் ஆனார்கள். தமக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்து அவற்றில் நடித்துப் புகழ் பெற்றார்கள். பின்னாளில் கவுண்டமனி, வைகைப்புயல் வடிவேல் எனத் தொடர்ந்த இந்தப் போக்கு தற்போது சூரி, யோகிபாபு என நீடிக்கிறது. வருங்காலத்திலும் இந்தப் போக்கு தொடரவே செய்யும் என்பது நிச்சயம்.

கலைத்துறையில் இந்தச் சாதனையைப் புரிவது ஒருபுறம் இருக்க தொழில்முறையில் ஒரு நகைச்சுவைக் கலைஞராக விளங்கி அரசியலில் குதித்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவர் இருப்பாரானால் அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி ஒருவரே. அரசுத் தலைவராக அவர் மேற்கொண்ட ஒருசில நடவடிக்கைகளை விமர்சிக்க அவரின் அரசியல் எதிரிகள் சிலவேளைகளில் அவரை மேனாள் காமடியன் எனக் கூறிக் கிண்டல் செய்வதும் உண்டு.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஆகியோருடன் அவர் நடத்திய உரையாடல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டதைப் பார்த்த பலரும் தற்போது அவரை ஒரு கதாநாயகனாகக் கொண்டாடி வருவதைப் பார்க்க முடிகின்றது. இதனை வேறு விதத்தில் சொல்வதானால், தொழில்முறை நகைச்சுவை நடிகராக இருந்த அவர் நிஜ வாழ்வில் கதாநாயகனாகத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார் எனலாம். உலகின் மிகப் பெரிய அதிகார பலத்தின் முன்னர் மண்டியிடாமல் துணிவுடன் அவர் நடந்து கொண்ட காட்சிகள் அவரது ஆதரவாளர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. அவரது ஆதரவாளர்கள் மாத்திரமன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் ஒரு சிலரும் கூட ஸெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு உள்ளனர்.

குறித்த காணொளியைப் பார்க்கும் போது சிங்கத்தின் குகையில் சிக்கிக் கொண்ட சுண்டெலி போன்று ஸெலன்ஸ்கி தோன்றினாலும் இறுதிவரை அவர் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பது அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

தனது பூகோள நலன்களுக்காக அமெரிக்காவால் வளர்த்து விடப்படுபவர்கள் தேவை முடிந்ததும் என்னவானார்கள் என்பதற்கு வரலாறு முழுக்க எடுத்துக்காட்டுகள் உள்ளன. சதாம் ஹுசைன் முதற்கொண்டு பின் லாடன் வரையானோர் மிகக் கிட்டிய உதாரணங்கள். அமெரிக்காவோடு முரண்படும் வேளையில் தனக்கும் அதுபோல் நடக்கலாம் என்ற சிந்தனை ஸெலன்ஸ்கி மனதில் நிச்சயம் எழுந்திருக்கும் என்பதையும் மறுத்துவிட முடியாது. ஆனாலும் அவர் தனது மனதில் பட்டதைத் துணிந்து பேசிவிட்டார்.

அதன் விளைவு என்னவாகும் என்பதே இப்போது உலகின் முன்னுள்ள கேள்வி.

ஸெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்கத் தரப்பில் இருந்து எழத் தொடங்கிவிட்டன. அவரது இடத்தில் வேறு ஒருவர், அவர் அமெரிக்காவின் சொல் கெட்டு நடக்கக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்ற விருப்பும் அமெரிக்கத் தரப்பில் இருந்து வந்துள்ளது. ஸெலன்ஸ்கியை அகற்ற வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்த அந்தக் கணத்தில் இருந்தே அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் என்பதை நிச்சயம் நம்பலாம். ஆனால், அது எவ்வகையான நடவடிக்கையாக இருக்கும் என்பதை இப்போதைக்குக் கூற முடியாது.

தேர்தல் ஒன்று நடைபெறக் கூடிய சூழல் தற்போதைக்கு உக்ரைனில் இல்லை. போர் நடைபெறும் ஒரு நாட்டில் நடக்கக்கூடிய தேர்தல் ஆளுந் தரப்புக்குச் சாதகமான ஒன்றாகவே அமையக் கூடிய வாய்ப்பே உள்ளது. அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக தேர்தலுக்கு ஸெலன்ஸ்கி ஒத்துக் கொண்டாலும் அவரே மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம். எனவே அமெரிக்காவின் விருப்பு நிறைவேறாது.

அதேவேளை, சரிந்திருந்திருந்த செல்வாக்கு சற்று உயர்ந்துள்ள தற்போதைய நிலையில் ஸெலன்ஸ்கி தானாகப் பதவி துறப்பார் என எதிர்பார்க்கவும் முடியாது. தவிர, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியமும் அவரை ஆதரிக்கிறது.

ஸெலன்ஸ்கியின் போட்டியாளர் எனக் கருதப்படும் உக்ரைன் ஆயுதப் படைகளின் மேனாள் தளபதி வலரி சலுஸ்னி தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவொரு சமிக்ஞைகளும் வெளியாகவில்லை.

எனவே, தனது திட்டத்தை அமெரிக்கா எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றது என்பது புரியவில்லை.

மறுபுறம், ஸெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் போருக்கான தீர்வு ஆகிய விவகாரங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஒன்று உருவாகி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கப் பயணத்துக்கு முன்னதாக ஸெலன்ஸ்கி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனையும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரையும் சந்தித்துவிட்டே சென்றிருந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் பிரித்தானியா சென்று மீண்டும் ஸ்டார்மரைச் சந்தித்துள்ளார். அமெரிக்காவை எதிர்த்துச் செயற்பட வேண்டிய ஒரு சூழலில் இந்த இரு நாடுகளும் தனக்கு ஆதரவு வழங்கும் என அவர் எதிர்பார்த்தால், அதனை அவர் முழுவதுமாக நம்பினால் அது வீண் முயற்சியே.

ரஸ்யாவுடனான உறவைச் சீர்செய்யும் விடயத்தில் ட்ரம்ப் தீவிரமாக இருப்பது ஐரோப்பிய நாடுகளைச் சினம் கொள்ளச் செய்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த நாடுகளால் அமெரிக்காவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வேல்ட், சோவியத் அதிபர் யோசப் ஸ்ராலின் மற்றும் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோருக்கு இடையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. 1943ஆம் ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 01 வரை நடைபெற்ற இந்த மாநாட்டிலேயே ஹிட்லருக்கு எதிரான இரண்டாவது களமுனையைத் திறப்பது தொடர்பில் முடிவு எட்டப்பட்டது. ரஸ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நாஸி படைகளுக்கு எதிராக சோவியத் செஞ்சேனை அப்போது கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தது. பெரும் படைபலத்தை அங்கே குவித்துவைத்து நாஸிக்கள் போரிட்டுக் கொண்டிருந்த நிலையில் இரண்டாவது களமுனையை நோர்மண்டியில் திறக்க வேண்டும் என்பதே ஸ்ராலினின் விருப்பாக இருந்தது. ரூஸ்வேல்ட்டும் அந்த யோசனையை ஆதரித்தார். ஆனால், பால்கன் பிராந்தியத்தில் இரண்டாவது களமுனை திறக்கப்பட வேண்டும் என்பதில் சேர்ச்சில் ஆர்வம் கொண்டிருந்தார். அவ்வாறு பால்கன் பிராந்தியத்தில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து இரண்டாவது களமுனையைத் திறந்தால் அங்கேயே செஞ்சேனையை மட்டுப்படுத்தலாம், ஐரோப்பாவை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து காப்பாற்றலாம் என்பது அவரது கரிசனையாக இருந்தது. எனினும் மூன்று தலைவர்களும் ஒருமித்து எடுத்த முடிவு காரணமாக நோர்மண்டி தரையிறக்கம் இடம்பெற்றது. இதனால் போரின் போக்கும் மாறியது வரலாறு.

சர்ச்சிலின் சிந்தனை பற்றி ஒருமுறை பிரஸ்தாபித்தபோது ஐரோப்பியக் கனவைக் காப்பாற்ற அமெரிக்கப் படைகள் ஏன் உயிர்துறக்க வேண்டும் என ரூஸ்வேல்ட் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது.

ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கையில் அவரும் ரூஸ்வேல்ட் பாணியிலேயே சிந்திக்கிறாரே என எண்ணத் தோன்றுகின்றது. தோல்வியில் முடியப் போகும் ஒரு போரில் அமெரிக்கா ஏன் தனது பொருளாதாரத்தை வீணடிக்க வேண்டும் என அவர் நினைப்பதில் தவறில்லை. அது தவிர அமெரிக்காவிற்கு இந்தப் போரால் நேரடி இலாபம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள் ஒருசிலவற்றின் ரஸ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காக, அந்த நாடுகளின் விருப்பை நிறைவேற்றுவதற்காக மூன்றாம் உலகப் போர் ஒன்றுக்கு உலகம் செல்ல வேண்டுமா என்பது ட்ரம்ப் தரப்பில் உள்ள நியாயமான கேள்வி.

இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்து, ட்ரம்பின் நிபந்தனையை ஏற்று அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் ஒப்பந்தத்திலும் அவர் கைச்சாத்திடக் கூடும். இனிவரும் காலங்களில் – தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள – அமெரிக்காவின் தாளத்துக்கு ஏற்ப அவர் ஆடக் கூடும்.

காமடி நடிகனாக இருந்து திடீரென கதாநாயகனாக உயர்ந்த ஸெலன்ஸ்கி ஒரு வாரத்திலேயே நிஜக் காமடியனாக மாறியிருப்பதே இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை.

Leave A Reply

Your email address will not be published.