பாகிஸ்தானில் ரயில் கடத்தல் – 300க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய போராளிகளால் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகளை 30 மணி நேரத்திற்கும் மேலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு மீட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்ட ரயிலில் 440 பயணிகள் இருந்தனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் இராணுவ வீரர்கள். இந்த நடவடிக்கையில் 33 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.
நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, போராளிகள் 21 பணயக்கைதிகளையும், 4 இராணுவ அதிகாரிகளையும் கொன்றதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் சில பயணிகளை பணயக்கைதிகளாக பிடித்து போராளிகள் வேறு பகுதிக்கு கொண்டு கொண்டு சென்றிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பலூச் விடுதலை இராணுவம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஆயுதமேந்திய போராளிகள் குழு, பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ரயிலைத் தாக்கியுள்ளனர். 48 மணி நேரத்திற்குள் பலூச் அரசியல் கைதிகளை அதிகாரிகள் விடுவிக்கவில்லை என்றால் பணயக்கைதிகளை கொன்று விடுவதாக போராளிகள் மிரட்டினர்.