கொரோனா வைரஸிடம் ராஜபக்ச அரசு தோற்கவேண்டும் என்று சிலர் விருப்பம் : அஜித் நிவாட் கப்ரால்
கொரோனா வைரஸிடம் ராஜபக்ச அரசு
தோற்கவேண்டும் என்று சிலர் விருப்பம்
நிதி இராஜாங்க அமைச்சர் கண்டுபிடிப்பு
போர் நடந்தபோது அதில் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்பியவர்கள் தற்போது கொரோனாவிடமும் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
“நாடு கொரோனா அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்ப அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் எமது நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது போல் ரூபாவின் பெறுமதியைக் கொண்டுவரமுடியும்.
அமெரிக்கன் டொலரோடு ஒப்பிடுகையில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நாணயப் பெறுமதி வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் இலங்கையில் அதன் வீழ்ச்சி 1.5 வீதம் என்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
அரசு நாட்டின் பொருளாதாரத்தை சமநிலையில் பேணும் வகையில் சில பொருட்களுக்கான இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளதுதுடன் கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையாமல் பாதுகாத்து வருகின்றது.
சிலர் அரசுக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு உதட்டால் வேறு எதையோ பேசுகின்றனர். அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டாலும் அரசு அதில் தோற்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே உள்ளனர். நாட்டில் போர் நடைபெற்ற காலத்திலும் அரசு தோற்க வேண்டுமென்ற மனநிலையிலேயே அவர்கள் செயற்பட்டனர்.
எவரும் கூறுவது போல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை. அதைச் சமநிலையில் பேணுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம்” – என்றார்.