காட்டிக்கொடுப்பின் விளைவே சவேந்திர சில்வா மீதான தடை :சஜித்தின் கோரிக்கைக்கு தினேஷ் பதிலடி
கடந்த அரசின் ஜெனிவா இணை அனுசரணை என்ற காட்டிக்கொடுப்பின் விளைவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த, எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத் தடையை நீக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலளித்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே நாம் வெளிவிவகார அமைச்சு என்ற வகையில் நடவடிக்கைளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றோம். இந்தத் தடை அநீதியானது என நாம் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளோம்.
கடந்த அரசு ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கி செய்த காட்டிக்கொடுப்பே இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை. எனினும், நாம் அந்த இணை அனுசரணையிலிருந்து விலகி இலங்கைப் படையினரை பாதுகாத்துள்ளோம். எம்மிடம் இப்போது கூறும் விடயங்களை நீங்கள் முதலிலேயே உங்கள் வெளிவிவகார அமைச்சருக்குக் கூறியிருக்கலாம். ஆனால், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் அதனைச் செய்தீர்கள்” – என்றார்.