“கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை… அனுரவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்” – பேராயர் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர், தாக்குதல் தொடர்பாக நேர்மையான மற்றும் நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் என்பதற்கான அறிகுறி கிடைக்கவில்லை என்றால், வீதியில் இறங்க வேண்டியிருக்கும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் கூறுகிறார்.
கொழும்பு பேராயர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேராயர் இவ்வாறு குறிப்பிட்டார்:
“ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாட்டை ஆட்சி செய்தவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. அந்த முறையை மாற்றுவதற்காகவே இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர நாங்கள் பாடுபட்டோம். ஆனால் இந்த முறை மாறவில்லை என்றால், நாங்கள் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக, அன்றைய தினம் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை கூடிய விரைவில் நிறைவேற்றுமாறு நாங்கள் இன்னும் கோருகிறோம்.
எனவே, 6வது ஆண்டு நிறைவுக்கு முன்னர் இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து நேர்மையான மற்றும் நியாயமான அறிகுறி கிடைத்தால், நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இல்லையென்றால், நாங்கள் மீண்டும் ஒருமுறை வீதியில் இறங்க வேண்டியிருக்கும்.” என்றார் பேராயர்.