இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை.

ல‌ஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த அபு கத்தால் எனும் பயங்கரவாதி சனிக்கிழமை (மார்ச் 15) இரவு பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

தேடப்பட்டு வந்த அபு கத்தால், ஜம்மு கா‌ஷ்மீர் மாநிலத்தில் பல தாக்குதல்களை நிகழ்த்தியவர்.

அவரின் உண்மையான பெயர் ஸியா-உர்-ரகுமான். சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் அவர் ஜேலும் பகுதியில் தனது பாதுகாவல் அதிகாரிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்தியா டுடே போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

தாக்குதல்காரர்கள் 15லிருந்து 20 முறை சுட்டனர். அபு கத்தாலும் அவரின் பாதுகாவல் அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரின் மற்றொரு பாதுகாவல் அதிகாரி மோசமான காயங்களுக்கு ஆளானார்.

அபு கத்தாலுக்கு பாகிஸ்தானிய ராணுவம் பலத்த பாதுகாப்பு வழங்கி வந்தது. ல‌ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர், சாதாரண உடைகளில் இருக்கும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் ஆகியோர் அவருக்குப் பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஜேலும் பகுதியில் உள்ள டினா பஞ்சாப் பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. அபு கத்தாலும் அவருடன் இருந்தோரும் அவ்வழியே சென்றபோது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அபு கத்தால், 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய 26/11 மும்பை தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்ட ஹஃபிஸ் சயீதுக்கு நெருக்கமானவர். ஜம்மு கா‌ஷ்மீரில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் யாத்திரிகள் இருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அபு கத்தால் முக்கியப் பங்கு வகித்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள ‌ஷிவ் கோரி ஆலயத்துக்குச் சென்று பேருந்தில் திரும்பி வந்துகொண்டிருந்த யாத்திரிகள் மீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹஃபிஸ் சயீதுதான் அபு கத்தாலை ல‌ஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை செயல்பாட்டு தளபதியாக நியமித்தார். ஹஃபிஸ் சயீது தனக்கு விடுத்த உத்தரவுகளின்படி அபு கத்தால் கா‌ஷ்மீரில் மோசமான தாக்குதல்களை நடத்தினார்.

2023ஆம் ஆண்டு ரஜூரி தாக்குதலிலும் அபு கத்தால் ஈடுபட்டதாக இந்தியாவின் தேசிய விசாரணை அமைப்பு, அபு கத்தால் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.