சவேந்திர சில்வா தளபதியாக வர பின்னணியில் இருந்தவர் சஜித்தே அவரே வெளிப்படைப் பேச்சு.
சவேந்திர சில்வா தளபதியாக வர
பின்னணியில் இருந்தவர் சஜித்தே
அவரே வெளிப்படைப் பேச்சு
“இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவனே இந்த சஜித் பிரேமதாஸ.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடையை நீக்க வலியுறுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தபோது, கடந்த அரசின் ஜெனிவா இணை அனுசரணை என்ற காட்டிக்கொடுப்பின் விளைவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.
இதன்போது சஜித் பிரேமதாஸ பின்வருமாறு பதிலளித்தார். அவர் தனது உரையில்,
“இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு பின்னணியில் இருந்தவன் இந்த சஜித் பிரேமதாஸ. இதனை நீங்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்கலாம். இப்போது இராணுவத் தளபதியாகவுள்ள சவேந்திர சில்வாவிடமும் கேட்கலாம்.
சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டும் என்று அவரின் பெயரைப் பிரேரித்தேன். பெரும் அழுத்தம் கொடுத்தேன். இது உங்கள் யாருக்கும் இன்று வரை தெரியாது. அதனால்தான் இப்போதும் அவர் மீதான அமெரிக்காவுக்கான பயணத்தடையை நீக்க வேண்டும் எனக் கோருகின்றேன்” – என்றார்.