விவாகரத்துக் கேட்ட மனைவியைச் சுட்டுக்கொன்ற ஆடவர்.

தாய்லந்தில் விவாகரத்துக் கேட்ட மனைவியை ஆடவர் ஒருவர் சுட்டுக்கொன்றார். சம்பவம் வியாழக்கிழமை (13 மார்ச்) நள்ளிரவில் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்தில் தலையிலும் வயிற்றுப் பகுதியிலும் கடுமையான காயங்களுடன் அந்தப் பெண் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினார். பின் மருத்துவமனையில் அவர் இறந்தார்.
இறந்த பெண் கணவருடனும் அவர்களது 10 வயது மகன், முன்னாள் கணவரின் 15 வயது மகள் ஆகியோருடனும் சிசாகேட் (Sisaket) மாநிலத்தில் வசித்து வந்தார்.
பிறகு பிள்ளைகளைக் கணவரிடம் விட்டுவிட்டு அவர் பேங்காக்கிற்கு வேலைக்குச் சென்றார். அண்மையில் அவரது மகளும் படிப்பதற்காகப் பேங்காக்கிற்குச் குடிபெயர்ந்தார்.
அப்போது அவரது கணவர் தம்மிடம் பல முறை தகாத முறையில் நடந்துக்கொண்டதாக மகள் கூறினார். அதனால் கணவரிடம் பெண் விவாகரத்துக் கேட்டார். ஆனால் கணவர் அதற்கு மறுத்தார்.
சம்பவம் நடந்தபோது இரு பிள்ளைகள் முன்னிலையில் அவர் மனைவியைச் சுட்டதாக இறந்த பெண்ணின் தாயார் சொன்னார். பின்னர் வளர்ப்பு மகளுடன் அங்கிருந்து தப்பிய அந்த ஆடவர் காவல்துறையினரிடம் சரணடைந்தார் என்று கூறப்பட்டது.
விவாகரத்துக் கேட்டதற்காக மனைவியைக் கொன்றதை ஒப்புக்கொண்ட அவர் வளர்ப்பு மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.