அமெரிக்க அரசின் ஆதரவில் இயங்கும் ஊடகங்களுக்கு இனி நிதியுதவி இல்லை

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, அரசு நிதியை நம்பியிருக்கும் மற்ற ஊடகங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.
இதற்கான உத்தரவை சனிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) டிரம்ப் பிறப்பித்தார். அந்த செய்தி ஊடகங்கள் யாவும் தகவல் போர் தொடுக்கும் சீன, ரஷ்ய தகவல் நிறுவனங்களை எதிர்கொள்வதற்காகவே இருந்ததாக நம்பப்படும் நிலையில் அதிபரின் இந்த உத்தரவு வந்துள்ளது.
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ ஃபிரீ ஏஷியா, ரேடியோ ஃபிரீ யூரோப் ஆகிய ஊடகங்களில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல இனி அனுமதி இல்லை என்றும் அவர்கள் தங்கள் அனுமதி அட்டை, மற்ற அலுவலக உபகரணங்கள் ஆகியவற்றை திருப்பித் தந்துவிட வேண்டுமென்றும் அதிபரின் உத்தரவுப்படி அனுப்பிய மின்மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப் ஏற்கெனவே உலக உதவித் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் நிதிக்கான முகவையை நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய தற்போதைய உத்தரவு உலக ஊடகங்களுக்கு செய்தித் தகவல்கள் வழங்கும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அமைப்பு மத்திய அரசின்கீழ் இயங்கும் தேவையற்ற அமைப்புகளில் ஒன்று என அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கிறது.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய அதிபரின் வெள்ளை மாளிகை செய்திப் பிரிவு அதிகாரி ஹேரிசன் ஃபீல்ட்ஸ், சுருக்கமாக நன்றி என 20 மொழிகளில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது அந்த ஊடக நிறுவனம் பல்வேறு மொழிகளில் இயங்குவதை கேலி செய்யும் விதமாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்தனர்.
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இயக்குநர் மைக்கல் அவ்ரோமோவிட்ஸ், தமது நிறுவனத்தில் ஓய்வு எடுக்கும்படி கூறப்பட்ட 1,300 பணியாளர்களில் தானும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார்.
“வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்துக்கு பொறுப்பான முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டியுள்ளது. அதில் ஓரளவு முன்னேற்றமும் கண்டுள்ளோம். ஆனால், இந்த நடவடிக்கை எங்களது முக்கியப் பணியைச் செய்ய விடாமல் தடுக்கிறது,” என்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.