எதிர்காலத்தில் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து சுகாதார சேவையை முடக்கினால் என்ன நடக்கும் ?

நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து எதிர்காலத்தில் யாராவது சுகாதார சேவையை சீர்குலைத்தால், அரசாங்கம் என்ற முறையில் மக்களின் பக்கம் இருந்து முடிவுகளை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், இந்த செய்தியை சுகாதார நிபுணர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறினார்.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அகில இலங்கை சிறுநீரக நோயாளிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த உலக சிறுநீரக தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
எங்களிடம் சுமார் ஒன்றரை லட்சம் சுகாதாரப் படை உள்ளது. அவர்கள் ஒவ்வொருவருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நாங்கள் சொல்லும் செய்தி என்னவென்றால், நீங்கள் ஒரு பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருப்பவர்கள். உங்கள் சேவை இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம். எனவே, உங்கள் புறநோயாளிகள் பிரிவு, வார்டு மற்றும் கிளினிக்கிற்கு பல சிரமங்களுடன் வரும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவது சுகாதாரத் துறையில் உள்ளவர்களின் பொறுப்பாகும்.
முந்தைய அரசாங்கங்களைப் போலவோ, முந்தைய அமைச்சர்களைப் போலவோ அல்லாமல், நீங்கள் எதையும் எங்களுடன் விவாதிக்கலாம். அந்த விவாதங்களுக்கு மக்களின் பக்கம் இருந்து எந்த ஒத்துழைப்பு வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து, நம் அப்பா அம்மா சகோதர சகோதரிகள் குழந்தைகள் போன்ற அப்பாவி மக்களுக்கு கிடைக்கும் சுகாதார சேவையை யாராவது சீர்குலைத்தால், மக்களின் பக்கம் இருந்து அதற்காக முடிவுகளை எடுக்க எங்கள் அரசு தயங்காது என்பதை சொல்ல விரும்புகிறேன்.
மிக முக்கியமான விஷயம் உங்கள் உடல்நலம்… உங்கள் உடல்நலத்தை பாதுகாப்பது. எனவே அந்த செய்தியை புரிந்து கொண்டு அனைத்து நிபுணர்களும் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.