மன்னாரில் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) பகல் ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவு, மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்க கோரியும், 5 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் பதவி உயர்வை 10 வருடங்களுக்கொருமுறை மாற்றியுள்ளமையைக்
கண்டித்தும் இன்றைய தினம் (17) நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில்
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு,
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அமைதியான முறையில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை தமது கோரிக்கைகளை முன் வைத்து தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.