பா.ஜ.கவின் போராட்டத்தை வரவேற்பு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த ஊழல் விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க சார்பில் சென்னை எழும்பூர் மைதானத்தில் இருந்து பேரணியாக சென்று சாலமுத்து நடராஜர் மாளிகையில் இருக்கக் கூடிய டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை இன்று (17-03-25) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருப்பதாக பா.ஜ.க ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதற்காக முறையாக அனுமதி கோரி பா.ஜ.க சார்பில் விண்ணப்பம் செய்திருந்த போதிலும், கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வந்த பா.ஜ.க நிர்வாகிகளை அடுத்தடுத்து காவல்துறையினர் இன்று (17-03-25) கைது செய்துள்ளனர்.

மேலும், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகளை அவர்களது வீட்டில் காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்தனர். அதனை மீறியும் போராட வந்த தமிழிசை செளந்தரராஜன் உள்பட பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், டாஸ்மாக்கிற்கு எதிரான பா.ஜ.கவின் போராட்டத்தை வரவேற்பு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவரிடம், டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராட வந்த பா.ஜ.கவினரை போலீஸ் வீட்டுக் காவலில் வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “சட்ட ஒழுங்கு என்ற அடிப்படையில் காவல்துறையினர் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அந்த அந்த போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுபானம் முற்றாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும், கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய ஒரு யுக்தியாக இதை கையாள்வதாக இருந்தால் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்களா? என்ற கேள்வியும் மறுபுறம் எழுகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பா.ஜ.க மது ஒழிப்பு கொள்கையை முன்னிறுத்தினால் அதை நாம் முழுமனதோடு வரவேற்கலாம், பாராட்டலாம். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி, மது ஒழிப்பு கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.