நியூகாசல் யுனைட்டட் , 56 ஆண்டுப்பின் வென்றது.

பிரிட்டனின் புகழ்பெற்ற வெம்ப்ளி (Wembley) அரங்கில் சாதனை படைத்தது நியூகாசல் யுனைட்டட் (Newcastle United) காற்பந்துக் குழு.
அது லிவர்பூல் (Liverpool) அணிக்கு எதிராக நேற்றைய (16 மார்ச்) கர்பவ் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் (Carabao Cup) இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
லிவர்பூல் அணிக்கு எதிர்பாராத தோல்வி. பல கிண்ணங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட லிவர்பூல் அணி கர்பவ் கிண்ணத்தைக் கைவிட நேர்ந்துள்ளது. நியூகாசலுக்கு இது மிகப்பெரிய சாதனை. 56 ஆண்டில் முதன்முறையாகக் கோப்பை ஒன்றை அது கைப்பற்றியது.
அது ஈராண்டுக்குமுன் மென்செஸ்ட்டர் யுனைட்டட்டிற்கு (Manchester United ) எதிரான கர்பவ் கிண்ண இறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. இம்முறை அது ஏமாறவில்லை.
டான் பர்ன் (Dan Burn), அலெக்சாண்டர் இசாக் (Alexander Isak) இருவரும் போட்ட கோல்கள் மூலம் நியூகாசல் வெற்றி பெற்றது.
கடைசி நேரத்தில லிவர்பூல் அணியின் பெடரிக்கோ சீசே ஒரு கோல் போட்டார். ஆனால் நியூகாசலை லிவர்பூல் அணியால் அசைக்க முடியவில்லை.
நியூகாசல் அணியின் பயிற்றுவிப்பாளர் எடி ஹௌ(Eddie Howe) 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு கர்பவ் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த முதல் நிர்வாகி என்ற பெருமையைப் பெறுகிறார்.
1955ஆம் ஆண்டு நியூகாசல் FA கிண்ணத்தை வென்றது. அதன் பிறகு அது பலமுறை கிண்ணங்களை வெல்லும் இடத்துக்கு மிகநெருக்கத்தில் வந்துள்ளது. நழுவிச் சென்ற கோப்பை, கைக்கு வந்திருப்பது இதுவே முதன்முறை.